சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் சிறைத்தண்டனைக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, 2021 பிப்ரவரியில் விடுதலையாக வேண்டும். ஆனால், முன்கூட்டியே சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்ற தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இன்னும் ஒரு வாரத்துக்குள் சசிகலா விடுதலையாவார் என்று அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி சசிகலா பரோலில் வந்தது தொடர்பாக கேட்டிருந்த கேள்விக்கு பெங்களூரு சிறைச்சாலை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சசிகலா இருமுறை பரோலில் வெளிவந்திருக்கிறார். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் முன்கூட்டியே 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். பரோலில் சென்ற நாட்களையும் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையும் கூட்டி கழித்தால், ஜனவரி 27-ம் தேதி வரை சிறையில் இருக்க நேரிடும் என்று ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கூறப்படுகிறது. 
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. என்றபோதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சசிகலா விடுதலையாவது உறுதி.