காலியானது கன்னியாகுமரி எம்.பி. தொகுதி... இடைத்தேர்தல் நடத்தப்படுவது எப்போது..?
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் இருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28 அன்று உயிரிழந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி தொகுதி எம்.பி. பதவி காலியானது. இதுதொடர்பான விவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்தியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளின்படி தொகுதி காலியானது முதல் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அதன்படி பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட வேண்டும். எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடக்குமா அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அமைச்சராகவும் திருச்சி எம்.பி.யுமான இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் கடந்த 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். ஆனால், திருச்சி நாடாளுமன்ற இடைத்தேர்தல், 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்தே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.