முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை வெளியான பிறகு 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எடுப்பதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.


சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எம்.எல்.ஏ. தனியரசு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சி.வி.சண்முகம், “பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,  24 மணி நேரத்தில் தமிழக அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த விவகாரத்தில் காலக்கெடு விதித்து ஆளுநரை நிர்ப்பந்திக்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் நிலை என்ன என்பது பற்றி ஆளுநர் அலுவலகத்தில் கேட்டு பதில் அளிக்கும்படி தமிழக அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் ஆளுநரின் செயலகத்திலிருந்து தமிழக அரசுக்கு பதில் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘ராஜீவ் காந்தி கொலையில் சதித் திட்டங்கள்  இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது பற்றி சிபிஐ, ஐபி உள்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் அடங்கிய பல்நோக்கு விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு தனது இடைக்கால விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி  பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அந்த விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கும் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் விடுதலை குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் செயலகம்  கூறியுள்ளது” என்று  அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது.