இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,500ஐ கடந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு ஊரடங்கு நடவடிக்கைகளில் சில தளர்வுகளை அனுமதித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடைகள் சில விதிமுறைகளுடன் இயங்கலாம் என தெரிவித்துள்ளது.சந்தை வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், வணிக வாளகங்கள் மற்றும் தொற்று பரவல் மையங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகள் என அணைத்தும் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்கலாம். இந்த இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவது கட்டாயம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் இயங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் பல பிராண்ட் ஒற்றை பிராண்ட்வணிக வளாகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க நடவடிக்கை கடந்த மாதம் 24லிருந்து 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பின்னர் இது மே 3 வரை நீட்டிப்பதாக தெரிவித்தார். முன் ஏற்பாடு இல்லாத இந்த அறிவிப்பினால் விளிம்பு நிலை மக்கள் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டன.

தற்போது தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து 5,063 பேர் குணமடைந்துள்ளனர். 775 பேர் உயிரிழந்துள்ளனர். 18,668 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.