திண்டுக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், தள்ளுபடியாகி விடும். எனவே, இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார்.

இந்த நிலையில் அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் எம்.பி. கருத்து பதிவிட்டு இரண்டு அணிகளும் பிரிந்துதான் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்,, "அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களின் கருத்தைத்தான் மைத்ரேயன் எம்.பி. கூறியிருக்கிறார். அது உண்மை தான்.

சில இடங்களில் தாமரை இலையும், தண்ணீரும் போன்றுதான் உள்ளார்கள். இரு அணிகளாக பிரிந்து, பின்னர் சேரும்போது சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். சிலர் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தில்தான் நடந்து கொள்வார்கள். அந்த வகையில் திண்டுக்கல்லும் விதிவிலக்கல்ல. திண்டுக்கல் மாவட்டத்தை உதாரணமாக கூட கூறலாம்.

மேல்மட்ட நிர்வாகிகள் அரசியல் பக்குவம் கொண்டவர்கள் என்பதால், விட்டுக்கொடுத்து இணக்கமாக இருக்கிறார்கள். அந்த பக்குவம் தொண்டர்களுக்கு வருவதற்கு காலஅவகாசம் ஆகும். இது சரிசெய்ய முடியாத பிரச்சனை அல்ல. விரைவில் இந்த பிரச்சினை சரியாகி விடும். மேலும் கட்சியில் புதிய நிர்வாகிகள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடந்தது வருத்தம் அளிக்கிறது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும், தள்ளுபடியாகி விடும். எனவே, எந்த பிரச்சனையும் இல்லை.  

சின்னம் கிடைத்ததும் நிர்வாகிகள் நியமனம் பற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

ஜெயலலிதா இறந்த பின்னர், தமிழக அமைச்சர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். அது தவறு இல்லை. ஆனால், அ.தி.மு.க. கட்சி மற்றும் ஆட்சியின் நலன்கருதி அமைச்சர்களுக்கு நாவடக்கம், சுய கட்டுப்பாடு தேவை என்று தொண்டர்களும், மக்களும் நினைக்கிறார்கள்.

திண்டுக்கல்லில் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்சி விழா அல்ல அது அரசு விழா ஆகும். எனவே, விழாவுக்கு அழைத்தால் செல்வோம்" என்று அவர் கூறினார்.