ரஜினிகாந்த், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், பிற கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக ரஜினி அறிவித்து இருந்தார். இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பிரசாந்த்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவின் எழுச்சியால் ஆட்டம் கண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் 2021 தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தற்போது பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளார். 

இந்நிலையில், விரைவில் தனிக்கட்சி தொடங்குவார். நடைபெறவிருக்கும் 2021 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று அவ்வப்போது தமிழக அரசியல் கள நிலவரத்துக்கு தலைப்பு செய்தியாகி வரும் ரஜினிகாந்த், பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். 2021 தேர்தலில் முழு வீச்சாக இறங்க உள்ள ரஜினிகாந்த், விரைவில் கட்சியை அறிவிக்க உள்ளார். இதற்காக, பிரசாந்த் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தமிழக அரசியல் கட்சிக்கும், தலைமைக்கும் உள்ள செல்வாக்கு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேலியும் கிண்டலுமாக பேசப்பட்டு வந்தாலும், தற்போது ரஜினிகாந்த் அரசியல் தொடங்குவதற்காக முக்கிய பிரமுகர்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி இருப்பது தகவல்கள் மூலம் ஆனந்தம் அடைந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.