what kind of propaganda by ttv dinakaran in rk nagar by election here is one sample
ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பறக்கும் அனல் இன்னும் ஒரு நாளில் ஆறிவிடும். ஆனால், இதுவரை பறந்துவரும் அனல் பலரையும் சுட்டெரிக்காமல் விடாது போலத் தெரிகிறது.
சிரித்துக் கொண்டே கோமாளித்தனமாகப் பேசி எதிராளியின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டும் கலையைக் கற்றிருக்கிறார் டிடிவி தினகரன். அவரது அண்மைக் கால ஊடகப் பேட்டிகள், அவரது இந்த இயல்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. இப்போது போதாக்குறைக்கு தேர்தல் பிரசாரம் வேறு! ஆர்.கே.நகரில் ரவுண்டு கட்டும் தினகரனின் லேட்டஸ்ட் சூளுரை, எடப்பாடியின் கோவணத்தை உருவாம விடமாட்டேம்ல ... என்பதுதான்!
ஆர்.கே.நகரில் பண விநியோகம் வரைமுறையின்றி நடக்கிறது என்று எல்லோரும் கூறினாலும், கையுடன் காவல்துறை பிடித்தாலும், நடவடிக்கை எடுக்க வழியின்றி கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். தேர்தல் ஆணையமோ, அதிகாரிகளை மாற்றி மாற்றி... படம் காட்டிக் கொண்டிருக்கிறது!
தினகரன் மட்டுமா காசு கொடுக்கிறார்...? தொகுதியில் மும்முனைத் தாக்குதல் நடக்கிறது என்கிறார்கள்! இருந்த போதும், யாரு காசு கொடுத்தாலும் வாங்கிக்கிங்க... ஆனா ஓட்ட மட்டும் எங்களுக்கு போட்டுடுங்க... ஏழைகளுக்கு இதான் வாய்ப்பு. எல்லாம் உங்கள்டேர்ந்து அடிச்ச பணம்தான். உங்ககிட்டயே திரும்பி வருது... - இந்த மாதிரியான பிரசாரங்களெல்லாம், ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்பதை விட, தமிழக வாக்காளர்களை தரம் தாழ்த்த அடுத்து இந்த அரசியல்வாதிகள் எடுத்திருக்கும் அஸ்திரம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனை தினகரனின் பிரசாரம் எடுத்துக் காட்டியிருக்கிறது.
தினகரனின் லேட்டஸ்ட் பிரசாரத்தில் அவர் தொகுதி மக்களிடம் பேசியவை இவை...
என்ன பேசறாங்க..? வீதி வீதியா போயி பணம் குடுக்குறது.. அப்டின்னு இருக்காங்க..
பாஜக.,வின் கரு.நாகராஜன் வீடு வீடாகப் போய் டீ குடிக்கிறார்.. சாப்பிடுகிறார்.. இப்படி எல்லாம் செய்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று நம்புகிறார். தேவநாதன் கூட்டம் போட்டு பேசி, லக்கானியை வேறு ஏதாவது வேலை பாக்கச் சொல்கிறார்.
முறைகேடாக நடக்கும் காவல் அதிகாரிகள் மீது நாம் புகார் கொடுத்தால், அவர்களை மாற்றி விட்டு, மாத்திட்டேன் என்று நம் வக்கீலுக்கே போன் போட்டு சொல்கிறார்..
என்ன நடக்குது இங்க? இது ஜனநாயக நாடா.. அல்லது வேறா?
இங்க போட்டியிடற மதுசூதனன் தள்ளாடிக்கிட்டே பக்கத்துல இருக்கற ரெண்டு பேர் மேலயும் சாஞ்சு விழுந்து கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கார்..
ஊரெல்லாம் பணம் பறக்குது. ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்.. அப்புறம் ஊடகம்... நீங்க! இது பெண்ட் ஆயிடுச்சின்னா என்ன ஆகும்.
எதுக்கு எடுத்தாலும், தினகரன் குக்கர் கொடுத்திட்டார். குக்கருக்குள்ள பணம் வெச்சி கொடுத்திட்டாருன்னு சொல்றாங்க. ரெண்டு நேற்று கூட காலையில் ராயபுரத்தில ஒரு குக்கர் ஷோரூம் புதுசா திறந்தாங்க. உடனே அங்க ஒரு ரெய்டு. யாராச்சும் குக்கார் வாங்கிட்டுப் போனாகூட செக்கிங்.
இப்படித்தான் என்னோட வீட்டுக்குள்ள நான் இருக்கும்போது, அங்க பணப்பட்டுவாடா நடக்குதுன்னு சொல்லி அதிகாரிங்க வந்தாங்க... நான் அவங்களை ஷூவ கழட்டிட்டு உள்ளே வாங்கன்னேன். எல்லாம் பாத்துட்டு பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடினாங்க...
நான் என்ன முட்டாளா? வீட்டுல பணம் வெச்சிக்கிட்டா குடுப்பாய்ங்க..?
ஆளும் தரப்புல இவங்க என்ன செய்யிறாங்கன்னு எனக்குத்தான் தெரியுமே! ஏன்னா எங்க ஆளுங்க அங்க இருக்காங்களே.! அவன் போன் பண்ணி சொன்னானே. அண்ணே அஞ்சு கோடி எடுத்துட்டு போறேன்.. கொடுக்கன்னு!
நான் உடனே... சரி எடுத்துட்டு போயி குடுப்பா, மக்களுக்கு நல்லது நடக்கட்டும்னு சொன்னேன்.
இங்க இருக்கறவங்க ரொம்ப தெளிவானவங்க... தாய்மார்கள் எல்லாம் ரொம்ப விவரம் அறிஞ்சவங்க. அம்மாவ ஏமாத்தி சேர்த்து வெச்ச காசையெல்லாம் வாங்கிகிட்டு, அவங்க யாருக்கு ஓட்டு போடணும்னு நல்லா தெரியும். அதனால் வாங்கிக் கட்டும்..
ஒரு சில இடங்கள்ல பணம் கொடுக்கும் போது, எங்க ஆளுங்க தடுக்கப் பாத்தார்ங்க... அவங்கள பத்தி காவல் துறையில புகார் செய்தாங்க...
இது தேர்தலா அல்லது என்னன்னு தெரியல...
பீகார்ல சொல்வாங்க.. பூத் கேப்சரிங் நடக்குதுன்னு
அது மாதிரி.. பணம் கொடுக்கிறாங்கன்னு இங்க எங்க ஆளுங்களை கைது செய்துட்டுப் போறாங்க..
கருணாநிதி அரசு இருக்கும் போதே கப் சிப்னு இருந்தாங்க.. இந்த அரசு நாளைக்கு இருக்கா, நாளன்னிக்கு இருக்கான்னே தெரியாத கூவத்தூர் பழனிசாமி அரசாங்கம். டெபாசிட் இருக்கான்னே தெரியாத அரசு.
இதுக்கே நீங்க கால்ல நிக்கிறீங்க. இன்னும் அடுத்த கால்ல நிக்கணும்ல..
அடுத்து நீங்க இருக்கணும்ல.. வீட்டுக்கு போயிடப்போறீங்களா ரிசைன் பண்ணிட்டு...
தேர்தல் முடியட்டும்.. ஆனா இந்த தேர்தல் நடக்காது
இப்ப கூட சொல்லலாம், தினகரன் மந்திரிகள்கிட்ட பணத்த குடுக்கச் சொல்லிட்டான்னு கூட சொல்லலாம். குக்கரு வாங்கி கொடுத்திருக்காங்கன்னு கூட சொல்லாம்..
ஏம்பா நான் யாருக்காவது ஒரு குக்கர் வாங்கி கொடுத்து நீங்க பாத்தீங்களா? சொல்லுங்க... அவங்க வீட்லயே குக்கர் இருக்கும் போது நாங்க எதுக்கு வாங்கிக் கொடுக்கணும்..?
அம்மா தொகுதி இது, அம்மாவின் பணிய நீங்கதான் செய்ய முடியும். நீங்க சுயேச்சையா இருந்தாலும், நீங்க தான் செய்ய முடியும். இந்த கோமாளி அரசாங்கத்துல போராடி உங்களாலதான் வாங்கி கொடுக்க முடியும்... அப்படின்னு சொல்றாங்க மக்கள்.
சுயேச்சை அவரு என்ன செய்துட முடியும்னு கேக்கறாரு பழனிச்சாமி அண்ணன். அவருக்கு செஞ்சி காமிக்கிறேன். எம்.எல்.ஏ., ஆகி செய்து காமிக்கிறேன். ஆட்சிய வீட்டுக்கு அனுப்பிட்டன்னா முடிஞ்சு போச்சு...
அம்மாவோட ஆட்சிய வர வைக்கிறேன். இன்னும் என்ன பண்ணனும்.. எடப்பாடி பழனிசாமியின் கோவணத்தை உருவாம வுட மாட்டேன்...
- இதுதான் தினகரனின் பிரசாரம்! இது சமூக தளங்களில் வைரலாகப் பரவ, ஒருவர் கொடுத்த கமெண்ட், தினகரனின் ஒட்டு மொத்த பிரசாரத்துக்கும் ஒத்தை வரி பதிலாகிப் போயுள்ளது. அது - ஜெயலலிதா என்ற சிங்கத்தையே மண்ணுக்குள் அனுப்பிய உங்கள் குடும்பத்திற்கு Eps கோவணத்தை உருவுவதா கஷ்டம்...
