டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டிடப் போகிறது? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. 'இந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கூறி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் உறுதியாக தெரிவித்தார்.
இபிஎஸ்ஸை சந்தித்த நயினார்
இந்த பொதுக்குழு முடிந்த பிறகு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தேர்தல் தொகுதி பங்கீடு, பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சூட்டோடு சூடாக அமித்ஷாவையும் சந்தித்த நயினார்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த கையோடு நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் கூறிய தகவல்களை நயினார் அமித்ஷாவிடம் கூறியதாகவும், பாஜக போட்டியிடும் உத்தேச பட்டியலை அவரிடம் அளித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அமித்ஷாவிடம் பேசியது என்ன?
இந்த நிலையில், அமித்ஷாவை சந்தித்தது ஏன்? அவரிடம் பேசப்பட்டது என்ன? என்பது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ''உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். எனது பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்கும்படி அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்தேன். இந்த விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா ஆகிய இருவரில் ஒருவர் பங்கேற்பார்கள். அமித்ஷாவிடம் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை நான் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான தகவல். நான் எந்த பட்டியலையும் அவரிடம் வழங்கவில்லை.
தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை
தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேசவில்லை. தமிழகத்தில் இருமுனை போட்டியே வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது அணி வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி வந்தாலும், நான்காவது அணி வந்தாலும் எத்தனை அணிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும்'' என்று கூறியுள்ளார்.


