‘இண்டியா கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது'
'வாக்குத்த் திருட்டு' குறித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும், இண்டியா கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை’’ என அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா, ‘இண்டியா கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது ' எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் உமர் அப்துல்லா அளித்த பேட்டியில்,‘‘ஓட்டுத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்துக்கும், இண்டியா கூட்டணிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அஜெண்டா இருக்கிறது. எஸ்ஐஆர், வாக்குத் திருட்டு போன்றவற்றை காங்கிரஸ் கட்சி முக்கியமான விஷயமாக தேர்வு செய்துள்ளது. என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு சொல்ல நாங்கள் யார்? அவர்களுக்கான பிரச்னைகளை அவர்கள் செய்து கொள்வார்கள். எங்களுக்கான பிரச்னையை நாங்கள் தேர்வு செய்வோம்’’ எனக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி வாக்குத்திருட்டு குறித்து நீண்ட காலமாக பாஜவையும், தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டி வந்தார். டெல்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணியும்,போராட்டமும் நடைபெற்றது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், இது அவர்களின் சொந்த பிரச்னை என உமர் அப்துல்லா பேசியுள்ளது இந்தியா கூட்டணியில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

