தமிழகத்துக்கு 8 வழிச்சாலையை கஷ்டப்பட்டு போராடி கொண்டு வந்ததாக கூறிய முதலமைச்சர், சில தினங்களுக்கு முன் சம்பந்தம் இல்லை என்கிறார். இதில் எது உண்மை... கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேளுங்கள். அதுதான் சரி என்றார்.

தமிழகத்துக்கு 8 வழிச்சாலையை கஷ்டப்பட்டு போராடி கொண்டு வந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்று கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்றார்.

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையிலும், 9 ஆம் தேதி அன்று அரூரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். நீதிமன்றத்தின் மூலம் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் போராட்டம் நடக்கும் என்றார்.

காவிரி ஆணையத்தை எதிர்த்து கர்நாடக அனைத்து கட்சி சார்பில், உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் அரசு ஒன்று இருக்கிறதா? மக்கள் யாரும் அரசு ஒன்று இருப்பதாக பொருட்படுத்தவில்லை. இருக்குற அரசாங்கமும் மக்களை கஷ்டப்படுத்தத்தான் இருக்கிறது என்பது மக்களோட எண்ணம். விரைவில் இந்த அரசாங்கத்துக்கு நல்ல முடிவு வரும் என்று கூறினார்.

அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உங்கள் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே என்றதற்கு தொன்னூறு சதவிகிதத்துக்கு மேலே அம்மாவோட தொண்டர்கள் எங்கக்கூடதான் இருக்காங்க. ஆட்சி அதிகாரத்துல இருப்பதால் அதிமுக என்கிற கட்சி ஓடிக்கிட்டு இருக்கு. ஆட்சியை விட்டு இறங்கினால் அது முழுதும் எங்களிடம் வந்து விடும் என்று டிடிவி தினகரன் கூறினார்.