சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தான் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்துகின்றனர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

சமூக நலத்துறையின் கீழ் மதுரை தங்கராஜ் சாலையில் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு குத்துவிளக்கேற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  திமுக ஆட்சியின்போது மதுரை மாவட்டத்தில் ரவுடி கலாசாரம் தலைதூக்கியிருந்தது. ஸ்டாலின் மதுரைக்கு  வருவதற்கே அஞ்சினார். ஆனால், தற்போது நிலைமை அப்படியல்ல. அதிமுக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் மதுரை சிறப்பான வளர்ச்சியை பெற்றளு்ளது. அதிமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்த்து விட்டு எதிர்கட்சி தலைவர் பேச வேண்டும். 

மேலும், பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பீகாரில் தேர்தல் காரணமாக இங்கே வெங்காயம் கொண்டு வர முடியவில்லை. அதனாலேயே தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு, திமுக ஆட்சி காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறைத் தேர்தலை அதிமுக ஆட்சியில் 2 முறை நடத்தி முடித்து உள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார் என்றார்.