தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனுக்கு உள்ளுக்குள்ளே ஒண்ணு வெச்சுக்கிட்டு வெளியில் ஒண்ணு பேச தெரியாது. யாரோ! எவரோ!ன்னு பார்க்க மாட்டார், பொசுக்குன்னு போட்டு உடைச்சுடுவார். அது தன் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மனசு சொன்னதை மறு நொடியே வாமிட் அடிக்கிற மனுஷன். இந்த குணத்தால் துரைமுருகன் சந்தித்த நன்மைகளும் எக்கச்சக்கம், பஞ்சாயத்துக்களும் எக்கச்சக்கமோ சக்கம். ஆனாலும் இந்த வயதிலும் தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளாமல் தடாலடியாய் போட்டுத் தாளிக்கிறார் மனிதர். ’ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்ததால் நாங்குநேரியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தீர்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு வாயை திறந்த துரைமுருகன்.

“அர்த்தமேயில்லாத வாதம் இது. நாங்குநேரி தொகுதியில் நாங்கள் தான் நிற்போம்! என்று என்றைக்குமே சொன்னதில்லை. பத்திரிக்கைகள், மீடியாக்களாக பேசுனீங்க இன்னைக்கு உங்களோட அனுமானம் தப்பாக போனதும் எங்ககிட்டே விளக்கம் கேக்குறீங்க. 2006-ல் காங்கிரஸ் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இடைத்தேர்தலில் மீண்டும் அக்கட்சியே அங்கே போட்டியிட முழு உரிமை உள்ளது. மேலும் அவர்கள் எங்கள் கூட்டணியில் இப்போதும் உள்ளதால் அவர்களுக்கே ஒதுக்கிவிட்டோம். 

நாங்குநேரியில் தி.மு.க. போட்டியிட வேண்டும்! என்று உதயநிதி சில நாட்களுக்கு முன்பே சொன்னாரே! என்கிறார்கள். அது அவருடைய எண்ணமாக இருந்திருக்கலாம். அதை அவர் வெளிப்படுத்தினார். ஆனால், இறுதி முடிவை எடுப்பது கழக தலைமைதானே! 
இந்த இரண்டு இடைத்தேர்தலின் வெற்றியானது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவில் எதிரொலிக்கும் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இதுவும் ஒரு இடைத்தேர்தல் அவ்வளவே! நான் இந்த இடைத்தேர்தலுக்கு எந்த முக்கியத்துவத்தையும் தர தயாரில்லை. இந்த  இடைத் தேர்தலின் முடிவு இந்த அ.தி.மு.க. அரசாங்கத்தை கீழிறக்கப் போவதுமில்லை, எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க வழி வகுக்கப்போவதுமில்லை. 
தமிழகத்தில் பொது தேர்தலுக்கு இன்னமும் பதினைந்து மாதங்களுக்கு மேல் இருக்கிறது. 

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் வேலூர் தொகுதியில் வெற்றி வித்தியாசத்தின் சதவீதமோ இறங்கிவிட்டது. இப்போதெல்லாம் மக்களின் மனநிலையை புரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது. ” என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார். துரைமுருகனின் சோர்வு தோய்ந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது ‘என்னத்த, இடைத்தேர்தல்ல போட்டியிட்டு, ஜெயிச்சு’ எனும் ரீதியில்  தொண்டர்களை உற்சாகம் இழக்க வைப்பது போல் உள்ளதாக ஸ்டாலினிடம் பிற சீனியர்கள் போட்டுக் கொடுத்துள்ளனர். 
-