அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான் தமிழக அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த செயற்குழு கூட்டத்திலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றிய காரசாரமான விவாதம் கடந்த 18ஆம் தேதி கூட்டத்தை போலவே, அதைவிட சற்று காரமாகவே வெடித்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வமோ, அடுத்த முதல்வர் வேட்பாளர் நான் தான் என்கிற விடாப்பிடியில் இருந்து விலவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலரே பேசியிருக்கிறார்கள். அன்வர்ராஜா இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே பேசினார். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக தேனி மாவட்டத்தை சேர்ந்த சையத் கான், கன்னியாகுமரி அசோகன் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா என்று நீண்ட வரிசையில் பேசியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூற , “நாங்க ரெண்டு பேரும் பேசி எப்படி முடிவு பண்றது? இது தொண்டர்கள் முடிவு பண்ணனும் அவங்களுக்கு தெரிஞ்சு வெளிப்படையாய் எல்லாம் நடக்கணும். ஆட்சி மன்றக் குழுவையே நாம் இன்னும் அமைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி பழனிச்சாமி, “பெரும்பான்மை ஆதரவு எனக்கு இருக்கிறது இதற்கு பிறகும் நாம் யாரிடம் பேசவேண்டும்“என்று கேட்டிருக்கிறார். உடனே, மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவின் ஆட்சியை கலைக்க அம்மா அரசுக்கு  எதிராக வாக்களித்தவர்களுக்கு ஆதரவளிக்க முடியாது என முழக்கமிட்டுள்ளனர். தன்னுடையை வளர்ச்சி, தன் குடும்பத்தின் வளர்ச்சி என அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என ஒருமித்த குரலாக நிர்வாகிகளுக்குள் காரசாரம் விவாதம்  தொடர்ந்து நடந்தது.

ஒ.பி.எஸ்ஸின் ஆதரவாளராக கருதப்படும், நத்தன் விஸ்வநாதன் கூட எடப்பாடியாருக்கே ஆதரவாக பேசினார். உச்சக்கட்டத்தை நெருங்கிய வாக்குவாதம் இறுதியில் முதல்வருக்கும், துணை முதல்வருக்குமிடையே தொடங்கியது. ஓ.பி.எஸ் நான் அம்மாவால் முதல்வர் ஆக்கப்பட்டேன். நீங்கள் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டீர்கள் என்று ஆவேசமடைந்தார். உடனடியாக பதிலளித்த எடப்பாடியார் நீங்களும் சசிகலாவால் தான் முதல்வர் ஆக்கப்பட்டீர்கள் என அதிரடியாக பதிலளித்து இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடியார் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டங்கள் மக்களுக்கு நல்ல பயனை அளித்து வருகின்றன. ஏன் இந்திய பிரதமரே என் நிர்வாகத் திறமையை பாராட்டி வருகிறார் என்று அதிரடி காட்டினார்.

பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்த கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர், முதல்வர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து 7 ஆம் தேதி அறிவிப்பார்கள்”என்று கூறி விட்டுப் போய் விட்டார். முன்னதாக தனக்கு டெல்லி ஆதரவு இருக்கிறது என நினைத்து தைரியமாக செயல்பட்டு வந்தார் ஓ.பி.எஸ். ஆனால், இப்போது அவர் டெல்லி வட்டாரத்தை தொடர்பு கொண்டபோது அவர்கள் காது கொடுத்துக் கூட கேட்க தயராக இல்லை என்கிற நிலைமை. அதனால் தான் ஓ.பி.எஸ் கடும் அப்செட்டில் கோபக் கணல்களை வீசுவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் தமது அரசியல் எதிர்காலம் அவ்வளவுதானா? என்கிற விரக்தியும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையால், வீண் வாதம் செய்யாமல் கிடைத்த பதவியை வைத்து அனுசரித்து அரசியலில் காலம் தள்ளுவதே உத்தமம் என்கிற நிலைக்கு ஓ.பி.எஸ் வந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆகவே, அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளர் பெயராக, எடப்பாடியாரின் பெயரே இருக்கும் என்றே கூறப்படுகிறது.