சர்கார் படத்தில் நடிகை வரலட்சுமி மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு படத்தில் கோமளவல்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சராக இருந்த ஒருவரின் மகளாக வரலட்சுமி நடித்துள்ளார். மேலும் முதலமைச்சராக இருந்த தனது தந்தைக்கு மாத்திரையில் ஓவர் டோஸ் கொடுத்து கொலை செய்யும் கோமளவல்லியாக வரலட்சுமி படத்தில் வருகிறார்.

இந்த இடத்தில் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற் பெயர் என்று சொல்லப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர் மரணத்தில் சர்ச்சை இருக்கும நிலையில் முதலமைச்சராக இருந்த ஒருவரை கோமளவல்லியான வரலட்சுமி கொலை செய்வதும் ஜெயலலிதாவை குறிப்பிடுவது போல் உள்ளதாக அ.தி.மு.கவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

ஆனால் கோமளவல்லி ஜெயலலிதாவின் இயற்பெயர் அல்ல என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்த சர்ச்சை எழுந்த போது 2002 அல்லது 2003ம் ஆண்டு கோமளவல்லி என்று தனக்கு பெயரே கிடையாது என்று ஜெயலலிதா கூறியதாகவும், தான் கோமளவல்லி என்கிற பெயரில் படத்தில் கூட நடித்தது இல்லை என்று ஜெயலலிதா தன்னிடம் கூறியதாகவும் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

சரி அப்படி என்றால் கோமளவல்லி என்று ஜெயலலிதாவின் பெயரை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தது யார்?. ஜெயலலிதா தமிழக முதலமைச்சரான பிறகு அவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் 202 – 2003 வாக்கில் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்தார். சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரி என்றும் அவரை இந்திய பிரதமராக்க கூடாது என்றும் பேசி வந்தார்.

மேலும் சோனியாவை அவரது இயற்பெயரான ஆன்டனியோ மொய்னோ என்றே ஜெயலலிதா அப்போது கூறி வந்தார். மேலும் ஒரு பேட்டியின் போது சோனியாவை பேச்சுக்கு பேச்சு ஆன்டனியோ மொய்னோ என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஜெயலலிதாவை அவரது இயற்பெயர் என்று கூறி கோமளவல்லி அம்மு என்று குறிப்பிட்டு பேசினார்.

இதனை தொடர்ந்தே ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவல்லி என்று பிரபலமானது. அப்போது முதல் கடைசி வரை ஜெயலலிதா தனது இயற்பெயர் கோமளவல்லி இல்லை என்று எங்கும் மறுக்கவில்லை. மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயாரான  சுலோச்சனா சம்பத் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருங்கிய தோழி ஆவார். இளமைக் காலம் தொட்டே சுலோச்சனாவும் – ஜெயலலிதாவும் நெருக்கமான தோழிகள்.

அந்த வகையில் சுலோச்சனா சம்பத் தான் ஜெயலலிதாவின் இயற்பெயரை தனது மகனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் கூறியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.