What is happening in Tamil Nadu says tamilisai

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பாஜக முயல்வதாகவும் தமிழிசை சொல்வதெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை தவிர பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் லாரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்காக டெல்லியில் 41 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தமிழகம் திரும்பியுள்ளனர்.

இதனிடையே அனைத்து கட்சியினர் நடத்தும் இந்த போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் இதனால் பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழிசை கூறுவது அனைத்தும் நடக்கிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும் என்றார். அதேபோன்று சின்னம் முடக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும் என்று கூறினார். அதே போன்று தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, முழு அடைப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறியுள்ளார். இதுவும் பாஜகவின் தூண்டுதலால் நடக்கும்.

தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பாஜக முயல்கிறது. மக்கள் சக்தியை கொண்டு அதை முறியடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.