எனக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்று புரியவில்லை என்று வி.கே. சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக தலைமையை நான் ஏற்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நான் செயல்பட்டு வருகிறேன். அதிமுக இப்படி இருப்பதால் திமுகதான் பயனடைகிறது. அதிமுக ஒன்றாக இணைவதை திமுகவினர் யாருமே விரும்பமாட்டார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும் என்றுதான் திமுகவினர் நினைக்கிறார்கள். 38 ஆண்டு கால அனுபவம் கொண்ட நான், விரைவில் அதிமுகவை வழி நடத்துவேன். கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது‌. 600-க்கும் மேற்பட்ட கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. 

குறிப்பாக சென்னையில் அதிகப்படியான கொலைகள் நடக்கின்றன. சென்னை பெருநகர ஆணையர் அலுவலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதுதான் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. திமுகவினர் திராவிட மாடல் என்று பேசி வருகிறார்கள். எனக்கு தற்போது வரை திராவிட மாடல் என்றால் என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. ஏழை, எளிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினர். சமத்துவக்காகப் பாடுபட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அதுதான் சிறந்த மாடல். அதிமுகவின் கட்சிக் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. 

அப்படி சொல்பவர்கள் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள். அதிமுகவை காப்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமே தவிர, இருப்பவர்களை விரட்டி அடித்து கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது. சென்னை வானகரத்தில் நடக்கவிருப்பது உண்மையான அதிமுக செயற்குழு கூட்டம் கிடையாது. எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள்தான் தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பெண்கள் சேர்ந்து அப்போது கட்சியை மீட்டெடுத்து முன்னேற்றினோம். அதேபோல விரைவில் இப்போதுள்ள பிரச்னையையும் சரி செய்து, என் தலைமையின் கீழ் அதிமுகவை கொண்டு வருவேன்.” என்று சசிகலா தெரிவித்தார்.