தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்து, தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்கின்றன. இந்த நிலையில் அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் போராடி வருகின்றன. கர்நாடக அணை கட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் ஒப்புதல் கொடுத்திருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அதைப்பற்றி யாரும் பேசவில்லை. பவானி ஆற்றில் வரிசையாக தடுப்பணைகளைக் கேரளா அரசு கட்டி வருகிறது. நமது நதிநீர் உரிமைகளை அண்டைமாநிலங்கள் பறித்து, தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்கின்றன. 

அதிலிருந்து தமிழகத்தை மீட்பது குறித்தோ, காப்பது குறித்தோ சிந்தனை அல்லது செயல் வடிவம் தமிழக அரசிடம் இல்லை.

இந்த நிலையில், அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன? இதை ஒரு பிரச்சனையாக கருதி கடந்த 3 மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. இதைநான் வெறுக்கிறேன். 

இவ்வாறு சீமான் கூறினார்.