தமிழ் சினிமாவின் செம்ம ஆக்‌ஷன் ஹீரோக்கள்!  பட்டியலில் விஜயகாந்துக்கு ஸ்பெஷல் இடம் உண்டு. பின்னங்கால்களை சுழற்றியடித்து அவர் செய்யும் ஆக்‌ஷன் பிளாக்குகள் அத்தனையுமே அதிரி புதிரியானவை. ரியல் வீரனாக பார்க்கப்பட்ட அந்த மனிதரை கடந்த சில வருடங்களாகவே படுத்தி எடுக்கிறது உடல் நலக் கோளாறுகள். கடந்த ஒரு வருடமாய் விஜயகாந்த் நன்கு தேறிவிட்டார்! என்று தான் தகவல்கள் வந்தன. சில மாதங்களுக்கு முன்பு கூட திருப்பூர் சென்று தன் கழக மாநாட்டில் கலந்து கொண்டவர் மைக் பிடித்து, சில நிமிடங்கள் பேசி, கட்சியினரை பிரமிக்க வைத்தார். ‘கேப்டன் சிங்கம் மறுபடியும் களமிறங்கிடுச்சு! இனி எங்க கட்சிக்கு ஏறுமுகம் தான். ஆட்சியை பிடிப்போம்.’ என்று கொக்கரித்தனர், குதூகலமாயினர். ஆனால் கடந்த சில நாட்களாக விஜயகாந்தை பற்றி வரும் தகவல்கள் அவ்வளவு மகிழ்வானதாக இல்லை.  

குறிப்பாக, சமீபத்தில் தே.மு.தி.க.வின் கொடி நாள் அன்று தலைமை கழகத்தில் கொடியேற்றுகையிலும், அதன் பின்னும் அவரிடம் காணப்பட்ட தடுமாற்றங்களோ தொண்டர்களை கலங்க வைத்தன. இந்த நிலையில், பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு புத்தகமொன்றில் விஜயகாந்த் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களோ, தே.மு.தி.க. தொண்டர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. அப்படி என்ன இருக்கிறது அதில்?...“தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்து வருகிறதாம். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக கண்களில் கண்ணீரும் வடிந்து கொண்டே இருந்தது. இதற்காக சென்னையில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதையடுத்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை மேற்கொண்டார். 2018ல் அமெரிக்காவுக்கு சென்றபோது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ததோடு, சிறுநீரக பிரச்னை மற்றும் கண் பிரச்னைக்கும் சிகிச்சை எடுத்துக் கொண்டார் தரமாக. 

ஆனால் ஒரே நேரத்தில் மூன்று நோய்களுக்கு தீவிரமான சிகிச்சை எடுத்துக் கொண்டது அவருக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டது! என்கிறார்கள். குறிப்பாக கண் பார்வை குறைபாடு ஏற்பட்டதை அடுத்தே, கருப்பு நிற கண்ணாடி அணிய தொடங்கினார். தற்போது ஒரு கண்ணில் பார்வைக்கு அதிக பாதிப்பாம். அடுத்த கண்ணிலும் சிரமங்கள் தொடர்கிறதாம். இந்த உபாதைகளால், எதிரில் இருப்பவரை அடையாளம் கண்டுபிடிக்க சிரமப்படுகிறாராம். மனைவி பிரேமலதா, சுதீஷ் அல்லது உதவியாளர் சின்னகுமார் அகியோர்தான், யார் வந்திருக்கிறார்கள் என்பதை கேப்டனுக்கு சொல்கிறார்களாம். இதைத்தொடர்ந்தே அவர்களுக்கு வணக்கம் சொல்கிறாராம். அதனால் இப்போதெல்லாம் விஜயகாந்தை வீட்டில் கூட கருப்புக் கண்ணாடி இல்லாமல் பார்க்க முடியவில்லை! என்று சொல்கிறார்கள். விஜயகாந்தின் பேச்சுப் பயிற்சிக்கென ஆள் வைத்தும்,  விஜயகாந்த் ஒத்துழைப்புக்  கொடுக்காததால், அந்த பயிற்சியும் நிறுத்தப்பட்டுவிட்டது. 

 

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன் மீண்டும் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லலாம் என்று தகவல் வருகிறது. ஆனாலும் கல்லீரல் மற்றும் சிறுநீரக சிகிச்சை மட்டுமே முதலில் அளிக்கப்படும் என தெரிகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த தகவலை பார்த்துவிட்டு, தலைமை கழகத்தையும், விஜயகாந்தின் வீட்டையும் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்புகொண்டு ‘கேப்டன் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்டபடி இருக்கின்றனர். பிரேமலதாவோ கொஞ்சமும் மனம் தளராமல், அவர்களை எதிர்கொண்டு ‘நம்ம கேப்டன் நலமா இருக்கார். ரொம்பவே அவர் உடல்நலம் தேறிட்டு வருது,  ஆரோக்கியமா பேசுறார். அவரோட கண் பார்வை பற்றி வெளியாகும் தகவல்கள் வதந்தி. நீங்க யாரும் வருந்தவோ, அதை நம்பவோ வேண்டாம். கழக வேலையை பாருங்க. நிச்சயம் கேப்டன் தலைமையில் ஆட்சி அமையும்.” என்று சமாளித்து அனுப்புகிறாராம். நம்பிக்கைதானே வாழ்க்கை!