திமுக ஊழல் நடந்ததா அல்லது அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்ததா என்பது பற்றி கோட்டையில் விவாதிக்க தன்னுடன் தயாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்தார் திமுக எம்பியும் பொதுச்செயலாளருமான ஆ.ராசா. தன்னுடைய சவாலுக்குப் பதில் அளிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சித்தார் ஆ.ராசா. இது அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தன்னுடன் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி முன் வராதது பற்றி விமர்சித்த ஆ.ராசாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். “ஆ.ராசா அழைத்தவுடன் சென்று விவாதிக்க அவர் என்ன பெரிய தலைவரா? ஆ.ராசா சார்ந்த திமுக கட்சிக்கு வேண்டுமானால் பெரிய தலைவராக இருக்கலாம். அதற்கு காரணம் பணம். ஆனால், இது அதிமுக என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் தவறு செய்த காரணத்தினால்தான் காங்கிரஸ் அரசாங்கமே அவரை கைது செய்து சிறையில் அடைத்தது” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.