ஜெயலலிதா அரசாண்டபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் அ.தி.மு.க.வில் மிக முக்கியமான அதிகார மையமாக வலம் வந்தவர் தம்பிதுரை. மோடியின் கடந்த ஆட்சியின் போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக, அதிக எம்.பி.க்களை கொண்டிருந்த கட்சியாக அ.தி.மு.க. விளங்கியதால்  நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அக்கட்சிக்கு வழங்க முன்வந்தனர். அப்போது தம்பிதுரையின் பெயரை அப்பெரும் பதவிக்கு பரிந்துரைத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெ.,வின் நன்மதிப்பையும், அதை சாத்தியமாக்கிக் கொள்ள சசிகலாவின் நம்பிக்கையையும் பெற்றவர் தம்பிதுரை. 

இவரால் கட்சி வளர்ந்ததா இல்லையா? என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் அ.தி.மு.க.வின் மூலம் மிகப்பெரிய லெவலில் ஆதாயங்களை, சாதகங்களைப் பெற்றவர் தம்பிதுரை என்பார்கள் விமர்சகர்கள். 

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஜோதிமணியிடம் தோல்வியுற்றவர் அதன் பின் ஸீனிலேயே இல்லாமல் போய்விட்டார். சென்னையில் மட்டுமில்லை, கரூரிலேயே அவரை ஆளுங்கட்சியினரால் பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் கரூரில் நடக்கும் அ.தி.மு.க. நிகழ்வுகளிலும் அவரது போட்டோ, பெயர் போடப்படுவதில்லை. 
ஏன் ஒதுக்கப்படுகிறார்  தம்பிதுரை? என்று விசாரித்தபோது கரூர் அ.தி.மு.க.வினரோ “உண்மைதான், இப்போ அவரோட பெயரை, போட்டோவை போஸ்டர்களில் போடுறதில்லை. அதுக்கு காரணம் அவரேதான். 

தேர்தல் முடிஞ்சு நாலு மாசமாச்சு, அவர் தோற்றுவிட்டாலும் கூட அவருக்கு மரியாதை  கொடுத்து போஸ்டர் பிளக்ஸ்களில் அவரோட போட்டோவை, பெயரை போட்டுவந்தோம். ஆனால் அந்த மரியாதையை அவர் காப்பாத்திக்கலை. செந்தில்பாலாஜியை கடுமையாக எதிர்த்து சவால் விட்டு கட்டப்பட்ட கரூர் அரசு மருத்துவமனை துவக்கவிழாவுக்கு கூட தம்பிதுரை வரவில்லை. இதை விட முக்கிய வேலை அவருக்கு வேற என்ன இருக்கபோவுது? கரூரில் ஒரு வளர்ச்சி நடக்குது, அந்த விழாவில் பங்கேற்கிற மனசு கூட இல்லை. அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருப்பாரா?
அதனாலதான் பார்த்தோம், அவரோட பெயர, போட்டோக்களை போடுவதை நிறுத்திட்டோம். யார் எப்படியும் போகட்டும் பரவாயில்லை, தனக்கு பதவி கிடைச்சா போதும்னு நினைக்கிறவர் தம்பிதுரை. 

அரசியல்ல, நிர்வாகத்துல எதைச் சொன்னாலும் ‘இதான் எனக்கு தெரியுமே’ன்னு சொல்லி நிர்வாகிகளை தவிர்க்கிறார். இதனாலதான் முதல்வரும், துணை முதல்வரும் இவரை ஒதுக்கிறாங்க. தனக்கு காரியம் ஆகணும்னா எதையும் செய்ய தயங்கமாட்டார் இந்த தம்பிதுரை. ஆனால் இன்னைக்கு அவரை சொந்த மாவட்டத்தில் கூட எங்க கட்சிக்காரங்க மதிக்கிறதில்லை. “ என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். 

ஆனால் தம்பிதுரை தரப்போ “அண்ணன்  இப்பவும் செல்வாக்கோடுதான் இருக்கார். அவருக்கு தலைமை முதல் தொண்டர்கள் வரை செல்வாக்கு அப்படியேதான் இருக்குது. 2021 தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி குறித்த அஸைன்மெண்டை அண்ணனிடம்தான் எடப்பாடியார் கொடுத்துள்ளார். அது தொடர்பா அடிக்கடி டெல்லிக்கு போயிட்டே இருக்கார். அதனால் கரூர் பக்கம் வர முடியலை. எப்படியும் இன்னும் மூணு மாசம் ஆகும் கரூருக்கு போக.”  என்றிருக்கிறார்கள். 
போகும்போது தாக்கீது சொல்ல மறக்காதீங்கோ தம்பி சார்!