கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி புகாருக்கு ஆளாகி உள்ள 3 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியைக் காப்பாற்றிகொள்ள வாய்ப்பு உள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சபாநாயகர் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார். 3 எம்.எல்.ஏ.க்களின் விளக்கத்தைப் பொறுத்து சபாநாயகர் நடவடிக்கை அமையலாம்

.
இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிகொள்ள வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஏற்கனவே 2017-ம் ஆண்டில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கூறினார்கள். இவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். தினகரன் முகாமில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையா சில நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துபேசி அதிமுகவுக்கு திரும்பிவிட்டார்.


அதற்கு முன்பாக விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீஸில், “எடப்பாடி பழனிச்சாமி, தலைமையிலான இந்த ஆட்சிக்கு என்னுடைய முழு ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொண்டு, தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்குவேன். நான் அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, என் மீதான மேல் நடவடிக்கையை கைவிடுமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.” என்று விளக்க நோட்டீஸில் ஜக்கையன் கேட்டுக்கொண்டிருந்தார்.

 
இதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், ஜக்கையன் தவிர்த்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஜக்கையன் தலை தப்பியது. தற்போது இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் இதேபோல விளக்கம் அளித்தால், அவர்களுடைய விளக்கத்தை சபாநாயகர் ஏற்றுகொள்ள வாய்ப்பு உண்டு. தினகரன் அணியில் உள்ள இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவுக்கு திரும்பிவிட வேண்டும் அல்லது பதவியை இழக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போது கட்சித் தாவல் சட்டத்தின்படி இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்க முடிகிறது.
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய பிறகு 3 எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை தெரியவரும். மாறாக, சபாநாயகர் நோட்டீஸ் அளிக்கும் முன்பே மூவரும் முதல்வரை சந்தித்துவிட்டால், எந்தப் பிரச்சினையுமின்றி சுபத்தில் முடியலாம்.