சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தினமும் பரிசு கொடுக்க உள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு.

 

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் ஒவ்வொரு துறைமீதும் விவாதம் நடைபெறும் அன்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அன்றன்று ஒவ்வொரு பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்களுக்கு திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்தார்.

 

ஒவ்வொரு பையிலும், 3 ஹாட்பாக்ஸ்களில் இந்த பிரியாணி வழங்கப்பட்டது. அத்துடன் சிக்கன் அயிட்டங்களும் வழங்கப்பட்டன. மாலை சுற்றுச்சூழல் விவாதம் தொடங்கி முடிந்த பிறகு அத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் விலையுயந்த சூட்கேஸை பரிசளித்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் திமுக கட்சியின் நிறமான கருப்பு சிவப்பு கலரில் இருந்தன அந்த சூட்கேஸ்கள். அதிமுகவுக்கு பிடிக்காத கலர் அது.

 

ஒருவேளை திமுக எம்.எல்.ஏக்களை கவர்வதற்காக இந்த கலரில் திட்டமிட்டே சூட்கேஸை வாங்கினார்களா? என்கிற சந்தேகமும் எழுகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இதே நிறத்திலான சூட்கேஸ்களே வழங்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏக்கள் இந்தப்பரிசுகளை பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஆர்வமுடன் வந்து மகிழ்ச்சியாக பரிசுகளை பெற்றுச் சென்றனர்.  ஆனால் அந்த சூட்கேஸுக்குள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. 

இப்படி தினமும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்கள் விதவிதமான பரிசுகளை வழங்க இருக்கின்றனர். இந்த விவாதம் 30 நாட்கள் நடைபெற இருப்பதால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தினமும் பரிசு மழையில் நனைய உள்ளனர். ஒருபுறம் தண்ணீர்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மற்றொரு புறம் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து முடங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு தினமும் பரிசு கொடுக்க எங்கிருந்து பணம் வருகிறது? யார் வீட்டு பணத்தில் இப்படி பரிசுகளை கொடுக்கிறார்கள் என பொதுமக்கள் கொதித்து வருகின்றனர்.