சாரதா சிட் ஃபண்ட் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக கொல்கத்தா கா‌‌வல் ஆணையர் ராஜிவ் குமார் மேகாலாயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  

சிபிஐ தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தில் ’’சாரதா சிட்ஃபண்ட் நிதிநிறுவன மோசடி வழக்கில் அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேற்கு வங்க காவல் ஆணியர் ராஜீவ் குமாருக்கும் தொடர்பு உள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகள் இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களை குற்றவாளிகளிடம் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் மேற்கு வங்க மாநில மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிட வேண்டும்’’ என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகாலாயாவில் உள்ள ஷில்லாங்க் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை விசாரணைக்கு ஆஜராகும் காவல்துறை ஆணையரை கைது செய்யக்கூடாது. காவல் ஆணையரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை சிபிஐ பெறக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மம்தா பானர்ஜி இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தது. மேலும் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதி அமர்விடம் சிபிஐ தரப்பு முறையிட்டிருந்தது. இதனையடுத்து இன்று நடந்த விசாரணைக்கு பிறகு ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.