மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சியை அகற்றுவதற்காக பல கட்ட உத்திகளை பாஜக வகுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக மம்தா ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களையும் பேரணிகளையும் பாஜக நடத்திவருகிறது. அண்மையில் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணி நடத்தியது. பல இடங்களில் பாஜகவினருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால், வன்முறை வெடித்தது.


இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “மக்கள் மீதோ அவர்களின் முன்னேற்றத்தின் மீதோ பாஜகவுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை. மாறாக மாநிலங்களில் நடைபெறும் ஆட்சியை அபகரிப்பதையே வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தங்களுடைய அரசியல் சுய லாபத்துக்காக மோடி அரசு மாநிலங்களில் பல்வேறு வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்து வருகிறது.


ஒரு புறம் கொரோனாவும், டெங்குவும் பெருந்தொற்றாக இருந்துவருகிறது. இன்னொரு புறம் மிகப்பெரிய பெருந்தொற்றாக பாஜக தாக்கி வருகிறது. ஒரு தீய சக்தியாக பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்காளத்தில் அரசியல் செய்வதாக இருந்தால் அதற்கு கலாச்சார அங்கமாக உள்ள சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு அக்கட்சி செயல்பட வேண்டும். இங்கே பாஜக ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.