week off for chennai police is to be planned

பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக போலீசார் பெருமளவு பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க சென்னை போலீஸ் கமிஷனர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பணிச்சுமை காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக இடைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன. இதனால் இடைவிடாமல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது, தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் இரவு-பகல் பாராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை என்று போலீசாருக்கு ஒரு மனக்குறை இருந்து வருகிறது. இதுபோன்ற இடைவிடாத பணிச்சுமையால் தங்களது குடும்பத்தை கவனிக்க முடியவில்லை என்றும் போலீசார் உள்ளக்குமுறலுடன் உள்ளனர்.

இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் போலீசார் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. போலீசாருக்கு தேவையான விடுமுறை அளிக்க வேண்டும், அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் போலீசாரால் எழுப்பப்பட்டு வருகிறது.

போலீசாரின் மனக்குறையை போக்கும்வகையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார் என்றும், சென்னை மாநகர போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்டமாக, முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை காவலர்களுக்கு மட்டும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கலாமா?, அதற்கடுத்தாற்போல, சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை சலுகையை கொடுக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் துறையைச் சேர்ந்த சிலர் விடுமுறை நாட்களில் வேலைபார்த்து அதனால் கிடைக்கும் பணபலனை அனுபவித்து வருகிறார்கள். விடுமுறை கிடைக்கும்பட்சத்தில் பணபலனில் குறைவு ஏற்படும். அதை சிலர் விரும்பவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன