அம்மா உணவகங்கள் மூலம் தினந்தோறும் 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாமா? அல்லது நீட்டிக்க வேண்டுமா? என்பது குறித்து  ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். கள நிலவரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களும் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர், வேளாண் பணிகளுக்கு செல்லும் விவசாயிகளை தடுக்கக்கூடாது. விளைபொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளுக்கு உதவ வேண்டும். விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஊக்குவிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டோர் 100 நாள் பணியில் ஈடுபடக்கூடாது என்றார். 

மேலும், கடைகள், சந்தைகளுக்கு செல்லும்போது மக்கள் தனிமனித இடைவெளியைகடைபிடிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொரட்கள் வழங்கும்போது தனிமனித இடைவெளிஅவசியம். டோக்கனில் உள்ள நாள் நேரடிப்படியே பொதுமக்கள் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு வரவேண்டும். பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளார். 

வெளிநாடுகளில் உணவுக்கு மக்கள் போராடும் நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை என்றும் கூறினார். நகரப்  பகுதிகளில் உள்ள கழிவறைகளை தினசரி 3 முறை சுத்தம் செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும் கூடாது. உள்ளே செல்லவும் கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை முதல்வர் அறிவுரை வழங்கினார். 

நோய் பாதிப்பு பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மத்திய அரசு பிரித்துள்ளது. பச்சை பகுதிகளில் தொழில் தொடங்க அரசு படிப்படியாக அறிவிப்பை வெளியிடும் என்று முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும்.  தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது. கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.