நெல்லையில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு இல்ல திருமண விழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணையில் செப்டம்பர் 12-ம் தேதி சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் மேலே விழுந்ததால், நிலைதடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் இருக்கும் பேனர்களை உடனே அப்பறப்படுத்த வேண்டும் என்றும், இனிமேல் அரசின் ஒப்புதல் இல்லாமல் பேனர்கள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி முதன் முதலில் திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல் அதிமுக தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு மகனின் திருமணம் கடந்த 1-ம் தேதி நடந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மு.க.ஸ்டாலினை வரவேற்க பணகுடியில் உள்ள ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. பேனருக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம் உத்தரவை மீறியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி அப்பாவு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.