எப்படியாவது திமுகவை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கில் எதிர் தரப்பினர் இடையூறு செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கு திமுகவினர் இறையாகிவிடக்கூடாது. மக்களின் ஆதரவைப் பெற்று ஆயிரம்விளக்கு திமுகவின் அணையாவிளக்கு என்பதை நிரூபிக்க வேண்டும் என்றே தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தாலும் ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் தெரிவித்துள்ளார்.திமுகவின் பிரச்சாரத்தின்போது அதிமுக-பாஜக பாமகவினர் இடையூறு செய்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தல் மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக-திமுக என இரு கட்சியினரும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கம் போல சென்னை என்பது திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆயிரம் விளக்கு அணையா விளக்கு என அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களே அத்தொகுதியை மெச்சியுள்ளனர். அந்த அளவிற்கு அது திமுகவின் செல்வாக்கு நிறைந்த தொகுதியாக இன்றளவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் அத்தொகுதியில் திமுகவின் வேட்பாளராக மருத்துவரும், சமூக ஆர்வலருமான டாக்டர் எழிலன் நாகநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் குஷ்பு போட்டியிடுகிறார். ஏற்கனவே சென்னை பெரு வெள்ளம், தானே புயல், கொரோனா நெருக்கடி, நீட் தேர்வு என சென்னை மக்களுக்கு தன்னால் இயன்ற அளவிற்கு தொண்டு செய்து சென்னையில் ஏழை எளிய அடித்தட்டு நடுத்தர மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்து வருகிறார் டாக்டர் எழிலன். சாமானியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள அவரை திமுக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய அவரது வெற்றி உறுதியாகி விட்டது என்றே திமுகவினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் டாக்டர் எழிலன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதே தொகுதியில் போட்டியிடும் குஷ்புவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் எழிலன் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது எதிரே வந்த பாஜக மற்றும் பாமகவினர் அவர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தனது ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய எழிலன், தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால், எப்படியாவது திமுகவை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கில் எதிர் தரப்பினர் இடையூறு செய்ய முயற்சி செய்கின்றனர்.ஆனால் அதற்கு திமுகவினர் இரையாகிவிடக்கூடாது. மக்களின் ஆதரவைப் பெற்று ஆயிரம்விளக்கு திமுகவின் அணையாவிளக்கு என்பதை நிரூபிக்க வேண்டும் என்றே தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே வெற்றி என்ற இலக்கை நோக்கி மட்டுமே நமது குறிக்கோள் இருக்க வேண்டும்.எதிர் தரப்பினர் எத்தனை இடையூறுகள் செய்தாலும் ஆயிரம்விளக்கு திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என அவர் ஆவேசமாக உறுதிபடக் கூறினார். அவரின் பேச்சுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
