பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்ததை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பரிந்துரை, அனுப்பியதாக வெளியான தகவல் தவறு என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அவசர அவசரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், 7 பேரை விடுவிப்பது தொடர்பான பரிந்துரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்ப வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக, தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் மாளிகை எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிக அரசின் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அந்த தகவலை மறுக்கும் வகையில், ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பரிந்துரை அனுப்பப்படவில்லை என்றும், அரசியல் அமைப்பு ரீதியாகவும், சட்ட திட்டத்துக்கு உட்பட்டும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அமைச்சரவையின் பரிந்துரை குறித்து முடிவுகள் விரைவில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.