மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பது தெரியவந்தால் மே 2 அன்று வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்வோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலங்கானாவுக்கு மத்திய அரசு திருப்பிவிட்டது பற்றி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற அமர்வு, ‘பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது’ என்று அறிவுறுத்தியிருந்தது. ‘ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதா? வென்டிலேட்டர் வசதிகள் உள்ளனவா? ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதா? தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ளதா? என வழக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளித்தது. தமிழகத்தில் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் அரசு தரப்பு பதில் அளித்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எம்.எஸ்.கிருஷ்ணன், வில்சன், பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர் பிரசாத் உள்ளிட்டோரும் ஆஜராகி தங்கள் வாதங்களை முன் வைத்தனர். 
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘பொது சுகாதாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது. மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடப்பது தெரியவந்தால் மே 2 அன்று வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்வோம். வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைக்கவும் தயங்க மாட்டோம். அரசியல் கட்சிகள் துணை இல்லாமல் கள்ளச்சந்தையில் எதையும் விற்க முடியாது. உயிர் காக்கும் விவகாரத்தில் விஐபி கலாச்சாரம் இருக்கவே கூடாது” என்று நீதிமன்றம் எச்சரித்தது.
