வேலூரில் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டதை கண்டித்துள்ள வைகோ உயிரைக்கொடுக்கவும் தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். 

தேமுதிகவினர் வேலூரில் உள்ள துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். தேமுதிகவினர் பதிலுக்கு பதில் பேசுவதை தான் தவிர்க்க விரும்புவதாகவும், நீங்களும் தவிருங்கள் என ஊடகங்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் வீடு முற்றுகை குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்திய வைகோ, “எச்சரிக்கிறேன், நாங்கள் ஒரு கூட்டணியில் இருந்தால் உயிரைக்கொடுப்போம் அதுதான் எங்கள் பழக்கம். பாதுகாப்பதற்கு உயிரையும் கொடுக்கும் கூட்டம் மதிமுக. ஆருயிர் சகோதரர் துரைமுருகன் இல்லத்தை முற்றுகையிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபோன்ற விபரீதத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். இதுபோன்ற வேலையில் ஈடுபட்டு விபரீதத்தை விலைக்கு வாங்காதீர்கள் என எச்சரிக்கிறேன், இந்த நடவடிக்கைக்கு பலத்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.”   என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியை அமைத்த வைகோ அதில் விஜயகாந்தை இணைக்க சாலிகிராமம் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளார்.