ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் என்ன, சின்னம் என்னவாக இருக்கும் என யூகங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சின்னங்களை சமீபத்தில் அறிவித்தது.

அதில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டது. இந்த கட்சி ரஜினியின் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. பாபா முத்திரையை சின்னமாக கேட்கப்பட்டதாகவும் அதற்கு பதில் ஆட்டோ சின்னம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இனிமேல் புதிதாக கட்சி தொடங்கி அதை பதிவு செய்து சின்னம் பெறுவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்பதால் ரஜினியின் கட்சிப் பெயர், சின்னம் இது தான் என உறுதியானது. ரஜினி தரப்பும் இதை மறுக்கவில்லை. மன்றத்தினர் பொறுமை காக்க வேண்டும் என்று மட்டும் கூறப்பட்டது.

அதேபோல் மக்கள் சேவை கட்சி நிர்வாகிகளும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்த் கட்சியை தனது பெயருக்கு மாற்றுவதற்காக டெல்லி வழக்கறிஞர்களிடம் பேசிவருகிறார். இந்நிலையில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ரஜினிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்பது நம்மாழ்வார் கொள்கைப் படி 25 ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு. இதன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. அதில் தங்கள் அமைப்பை குறிக்கும் வகையில் மக்கள் சேவை கட்சி என பெயர் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

“புதிதாக கட்சி துவங்கவுள்ள ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கூடாது. அப்படி பதிவு செய்தால் மக்கள் சேவை இயக்கத்திற்கும் மக்கள் சேவை கட்சிக்கும் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும். கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் நலன் கருதி நம்மாழ்வார் கொள்கை வழியில் இயங்கி வரும் மக்கள் சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் களங்கம் விளைவிக்கும்.  வேறு பெயரில் கட்சி துவங்குவதை வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் சேவை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்காமல் மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்தால் உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் ” என அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.