நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் அண்ணா, போய் வாருங்கள்'’என ஜெ.அன்பழகனுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக, அன்பழகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. கொரோனாவால் உயிரிழந்ததால் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஜெ.அன்பழகனின் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 62 வது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் ஜெ.அன்பழகன் காலமானது அனைவரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண தொண்டராக இருந்து, பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என உயர்ந்தவர் அன்பழகன்.

இந்நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘’கழகம், கலைஞர், தலைவரை தாண்டி வேறெதுவும் சிந்தித்தவரில்லை. மாநாடு, பொதுக்கூட்டம் என கழக பணிகளை கச்சிதமாக முடிக்கும் ஆற்றலாளர். கழகத்துக்கும், தலைவருக்கும் பேரிழப்பு. அன்பு அண்ணனின் தம்பியாக எனக்கு ஈடுசெய்ய முடியா இழப்பு. நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் அண்ணா, போய் வாருங்கள்'’எனத் தெரிவித்துள்ளார்.