எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முகத்திரையைக் கிழித்து ஓட ஓட விரட்டி அடிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின்  இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது  குறித்தும் அரசியல் காய்நகர்த்தல்களில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

பாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி என்பது உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவின் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம் கோவூர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின் இளைஞரணி செயலாளருமான வளர்மதி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் பாகம் முகவர்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும், வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகஅமோக வெற்றி பெறும். 

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியை அதிமுகவின் கோட்டையாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது, ஆனால் திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது. வரும் தேர்தலில் அக்கட்சியின் முகத்திரையை கிழித்தெறிந்து ஓட ஓட விரட்டியடிப்போம். அதிமுகவை பற்றி குறை கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. அதே நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். தனக்கு பின்னரும் நூறு ஆண்டுகளுக்கு கழக ஆட்சி நிலைத்து நிற்கும் என கூறிய அம்மாவின் பொன்னான வார்த்தைகளை நாம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.