கள்ளக் குறிச்சி மாணவி விஷயத்தில் விசாரணை முடிச்சிட்டோம்.. 2வது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வரட்டும்.. அண்ணாமலை.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பாஜக அடிப்படை விசாரணையை செய்து முடித்துவிட்டது என்றும், இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அறிக்கையை வெளியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் பாஜக அடிப்படை விசாரணையை செய்து முடித்துவிட்டது என்றும், இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அறிக்கையை வெளியிடுவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தற்கொலை அல்ல கொலை என பலரும் கூறி சந்தேகம் எழுப்பிவரும் நிலையில் அண்ணாமலையார் இவ்வாறு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர். ஆனால் மாணவி பள்ளிக்கூடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி நிர்வாகம் கூறிவருகிறது,
மாணவி தற்கொலை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்றும், தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் எனது மகள் இல்லை என்றும், தங்களின் மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், மகளை கொலை செய்து விட்டு நாடகமாடுகிறார்கள் என்றும்மாணவியின் பெற்றோர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் முதற் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தேகத்துக்கிடமான சில தடயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மாணவியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கைக்காக பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் நக்கீரன் யூடியூப் சேனல் மாணவி மரணம் அடைந்த காலத்தில் சில முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது. இது மாணவி விவகாரத்தில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி வருகிறது.
மொத்தத்தில் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மாணவிக்கு என்ன நடந்தது என்பது ஓரளவுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் மாணவியின் மரணமடைந்த விவகாரத்தில் அடிப்படை விசாரணையை செய்து முடித்துவிட்டதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படி வருகிற 75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் கட்சி பாகுபாடு இன்றி தேசிய கொடியை ஏற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார் .
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் கொள்கை பாஜகவின் டிஎன்ஏ விற்கு எதிரானது, திமுக பிரிவினை பேசுகிற கட்சி, அப்படி இருக்கும்போது திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முடியாது, யாருடனோதான் கூட்டணி வைத்து ஜெயிக்க வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை, தனித்து நின்று பாஜக வெற்றி பெறும் என்றார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, மாணவி இறப்பு சம்பந்தமாக அடிப்படை விசாரணை செய்து முடித்துள்ளோம், அரசின் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் எங்களது அறிக்கையை சமர்ப்பிப்போம் இவ்வாறு அவர் கூறினார்.