மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அவசரமாக கொண்டுவந்தது ஏன்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் இதுகுறித்து பேசிய அவர்,  “வேளாண்சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதைத்தான் விவசாய பிரதிநிதிகளுடன் பேசிய கலந்துரையாடலில் எடுத்துரைத்தேன். அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். விவசாயிகள் வேளாண்சட்டங்களை வரவேற்கின்றனர். எங்கேயோ இருக்கும் ஏஜெண்ட்டுகள், அவர்கள் பயன்படும் நோக்கில் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளும் போராடி கொண்டிருக்கின்றனர். வரும் தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது பதவிக்காக வாயை மூடி அமைதியாக இருந்தனர். மக்களை பற்றி கவனிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சி. அதில் அங்கம் வகித்தது திமுக. நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காகத்தான் அதிமுக போராடியது. முடியவில்லை. அதனால் ஒரு ஏழை மாணவர்கள் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் 7.5% உள் ஒதுக்கீடு கொண்டுவந்துள்ளோம். யாரும் கேட்கவில்லை. நாங்களே கொண்டுவந்தோம்.

நான் அரசுப்பள்ளியில் படித்தவன். அதனால்தான் அரசு மாணவ மாணவிகளுக்கு பயன்பட வேண்டும் என்று கொண்டு வந்தோம். நீட் தேர்வுக்கு முன்பு நுழைவுத்தேர்வில் 40 மாணவர்கள் மட்டும்தான் படித்தார்கள். நீட் தேர்வு வந்தபோதும் 6 மாணவர்கள் படித்தார்கள். அதனால்தான் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு இப்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.