தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சுற்றுப் பயணத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.  

ஆனால் அமமுக சின்னம் கிடைக்குமா அல்லது சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டுமா என்று நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்காத நிலையிலும் ஒட்டுமொத்தமாக பொதுவான ஒரே சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
அமமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காத நிலையில், சென்னை ராயபுரம் பகுதியில் இன்று  தினகரன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 
 
வடசென்னை அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணனுக்கு வாக்கு கேட்டு சென்னை ராயபுரத்தில் மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசிய தினகரன், “எங்களை அரசியலிலிருந்து ஒரங்கட்டிவிட எண்ணி எங்களின் துரோகிகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு சதித் திட்டங்களை செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

அமமுகவிற்கு சின்னம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எத்தனையோ சூழ்ச்சிகளைச் செய்தனர். ஆனால் எங்களுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கும். அந்த சின்னத்தில் எங்கள் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

தற்போது பாஜக மற்றும் அதிமுக அரசுகள் அமமுகவைப் பார்த்து அஞ்சி நடுங்குவதாக தெரிவித்தார். மத்திய ஆட்சிக்கு நாங்கள் அடிமைகளாக இல்லாத காரணத்தால் பல சோதனைகள் கொடுக்கிறார்கள். 

எத்தனையோ குடைச்சல்கள் கொடுத்தாலும் இவன் சமாளித்துவிடுகிறானே என்று இரு கட்சிகளும் மண்டையை உடைத்துக் கொள்வதாக கிண்டல் செய்தார். தற்போது அமமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகளை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்ட தினகரன், வடசென்னை தொகுதியில் நிறுத்துவதற்கு பயந்துகொண்டு தனது மகனை தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்தியிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.