தங்கள் உயிரை இழந்தாலும் கூட ஒரு செண்ட் நிலத்தை கூட, சாலை அமைப்பதற்கு எடுக்க விடமாட்டோம்  என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ள திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், அளவீடு செய்து அதிகாரிகள் ஊன்றிச் சென்ற நடு கற்களை பிடுங்கி எறிந்தனர்.

சென்னை-சேலம் 8 வழி பசுமைசாலை ரூ.10 ஆயிரம் கோடியில்அமைக்க காஞ்சிபுரம், திருவண்ணா மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயற்கை எழில்கொஞ்சும் மலைகள், காடுகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தால் பசுமையாக காட்சி அளிக்கும் விவசாய நிலங்கள் இன்னும் எத்தனைநாட்கள் இருக்கும் என்பது தெரியவில்லை.திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களும் அடிப்படையாகவே விவசாயத்தை சார்ந்தவை. பாக்கு மரங்கள், குலை குலையாய் காய்வைத்திருக்கும் தென்னை மரங்கள் என எங்கு பார்த்தாலும் 5 மாவட்டங்களும் பசுமையாகவே காட்சியளிக்கின்றன. அந்த பசுமையெல்லாம் இன்னும் சில மாதங்களுக்கு தான்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி, செங்கம் வரையில்122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளைபோலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் விவசாயிகளை விரட்டியடித்து முடித்து விட்டனர்.

காஞ்சி அருகே உள்ள ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் காவல்துறையின் பாது காப்புடன் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

சி. நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் பணியை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டுள்ளனர். அதிகாரிகள் நட்டு செல்லும் எல்லைக்கற்களை விவசாயிகள் உடனுக்குடன் பிடுங்கி வீசி எறிந்து வருகின்றனர்.

தங்களுக்கு வாழ்வாதாரம் தரும் இந்த விவசாய நிலங்களில் பசுமைச்சாலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இதற்காக ஒரு செண்ட் இடத்தைக் கூட நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.