பிரதமர் மோடிக்கோ அல்லது மத்திய அரசுக்கோ தமிழக அரசு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதே நேரத்தில் நாங்கள் பயப்படுவது போல நடிப்போம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மத்தியில்  ஆளும் பாஜக ஆட்டுவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின்திட்டம், நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே ஏற்றுக் கொண்டன.

இதனால் மத்திய அரசுக்கு தமிழக அரசு பயந்து கொண்டு செயல்பட்டு வருவதாகவும் மோடி என்ன சொல்லுகிறாரோ அதை உடனடியாக தலையை ஆட்டி ஏற்றுக் கொள்வதாகவும்  அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசு மோடிக்கு எந்தவிதத்திலும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என  தெரிவித்தார்.

பொதுவாக நாங்க எல்லாம் மோடிக்கு பயப்படுகிற மாதிரி நடிப்போம், ஆனால் உண்மையிலேயே பயப்பட மாட்டோம்  என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.