ஆளாளுக்கு ஆட்டநாயகர்கள் ஆகிவிட்ட தமிழக அரசியலில் இந்த வாரம் ரஜினி வாரம்! எம்.ஜி.ஆர். சிலை மேடையில் நின்று ‘இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் வருகிறேன்.’

என்று தலைவர் பட்டாசு கொளுத்திவிட்டு ஹ்ஹஹாஹாஹா! என நகர்ந்துவிட, எல்லா கட்சி தலைவர்களும் எள்ளும் கொள்ளுமாய் வெடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் தமிழக பி.ஜே.பி.யின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் “ரஜினி சொல்வதை நான் ஏற்கவில்லை.

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது, நல்ல தலைவர் இல்லை! என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். எல்லா பிரச்னைகளையும், சூழல்களையும் ஒரே மாதிரி அரசியலில் அணுகிட முடியாது. வெவ்வேறு விஷயங்களுக்கு வெவ்வேறு வகையில் அணுக வேண்டி இருக்கிறது.

இந்த மாநில பிரச்னை குறித்து அவர் என்னென்ன கருத்துக்களை சொல்கிறாரோ இதையேதான் நாங்கள் பல நாட்கள் முன்பே கூறினோம். ஆனால் ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.

புதிதாக அரசியலுக்கு வரும் நபர்களை வரவேற்கிறேன். அவர்கள் கட்சி துவங்கி தெளிவாக நடைபோடட்டும், பிறகு மக்கள் அவர்களை எடைபோடுவார்கள். யாரை ஆதரிப்பது என்பது மக்களின் கையில் இருக்கிறது.” என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை! என்று ஏங்கி, ஆதங்கப்பட்டு தமிழிசை பேசியிருப்பதை தமிழக பி.ஜே.பி.யின் பிற தலைவர்கள் ரசிக்கவில்லை.

வழக்கமாக தமிழிசை வடக்கே சென்றால் அதற்கு நேர் எதிராக தென் கிழக்கில் செல்லும் ஹெச்.ராஜா, இந்த விவகாரத்திலும் அதே நிலையை எடுத்திருக்கிறார். அவர், “தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளது சரிதான்.

ஜெ., மறைவுக்குப் பின் மக்களுக்கு தி.மு.க. மீது நம்பிக்கையே வரவில்லை. இதைத்தான் அக்கட்சி டிப்பாசிட் இழந்த ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.” என்றிருக்கிறார்.

விளம்பரம் கிடைக்க என்ன பண்ணப் போகிறாரோ தமிழிசை!