we can prove our side in rk nagar election said ttv dinakaran
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்துவிட்டார் டிடிவி தினகரன். அதனை தன் ஆதரவாளர்களைக் கொண்டே சென்னையில் அறிவிக்கவும் செய்து விட்டார். ஆனால் அதற்கு முன்னதாக, தன் சின்னம்மாவிடம் அனுமதி கேட்பதற்குச் சென்றுவிட்டார் பெங்களூருக்கு.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவரை அடிக்கடி சிறையில் சென்று சந்தித்து வருகிறார் தினகரன். இந்நிலையில் இன்றும் அவர் பெங்களூர் சென்றிருந்தார்.
அண்மையில் சசிகலா குடும்பத்தினர் தொடர்புடையவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து, தினகரன் தரப்புக்கு அரசியல் ரீதியான நெருக்கடி ஏற்பட்டது. இரட்டை இலைச் சின்னம் கைவிட்டுப் போனது. இப்படி பல்வேறு அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலாவை சிறையில் சந்தித்து நடந்தவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னர், பெங்களூருக்கு தினகரனும் இளவரசியின் மகன் விவேக்கும் சென்று சசிகலாவை சந்தித்த நாளில்தான் சென்னையில் வருமான வரி சோதனைகள் நடத்தப் பட்டன. எனவே, அதன் பின்னர் இப்போதுதான் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தினகரன், அவரது மனைவி, இளவரசி மகன் விவேக், மகள் ஷகிலா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் முன்னரே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதனை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லையாம். சசிகலாவின் கணவர் நடராஜனும் கூட, இப்போது போட்டியிட்டால், சிறைக்குச் செல்லும் அபாயம் ஏற்படும் என்று கூட எச்சரித்தாராம். ஆனால், இன்று பெங்களூர் சென்ற தினகரன், இது குறித்து சசிகலாவிடம் விவாதித்து, அதன் பின்னர் அங்கிருந்தே தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துவிட்டாராம்.
இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று முன்னரே தெரிவித்திருந்ததால், ஊடகத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து தகவல் வந்ததை அடுத்து, வேட்பாளராக தினகரனே நிற்பார் என்று அறிவிக்கப் பட்டதாம்.
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து விட்டு வந்த பின்னர் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தற்போது மக்கள் விரும்பாத ஆட்சி நடக்கிறது. இது ஆர்.கே.நகர் தேர்தலில் பிரதிபலிக்கும். சசிகலாவிடம் ஆசி பெறவே வந்துள்ளேன். இரட்டை இலை விவகாரத்தில் வந்துள்ளது தற்காலிகமான ஒரு தீர்ப்புதான். நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கி, இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம். 99 சதவீத தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர் என்பதை நிரூபிப்போம். ஆட்சியில் உள்ளவர்களுக்கு 111 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. இருப்பினும் ஆர்.கே.நகர் தேர்தல் முடியட்டும். எல்லாம் சரியாகும். ஆர்.கே.நகர் தேர்தலில் எல்லாம் பிரதிபலிக்கும் என்று கூறினார்.
