வேலூர் மக்களவைத் தொகுதியில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அத்தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை முதல்-அமைச்சராக இருந்தார். அப்பேற்பட்ட இந்த கட்சியை ஜெயலலிதா வழி நடத்தி வந்தார். அவர், அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொண்டர்களாகிய நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 

எம்.ஜி.ஆர். இருக்கும் போது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். தற்போது 1½ கோடி தொண்டர்கள் உள்ளார்கள். யாராலும் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது.

ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கி வருகிறோம். வரும் ஆண்டுகளில் 41 லட்சம் பேருக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர இருக்கிறோம். குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

மு.க.ஸ்டாலின் வாயில் வருவதெல்லாம் பொய்யான வாக்குறுதிகளாக வருகின்றது. ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை தருகிறேன் என்று கூறி வருகிறார். நாங்கள் ஏற்கனவே 4 மாவட்டங்களில் 150 நாள் வேலை கொடுத்துவிட்டோம். 100 நாள் வேலை திட்டம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

எங்கள் தொண்டர்களிடம் பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் திமுகவினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், நீங்கெல்லாம் இப்பதான் ரௌடி… நாங்க பிறப்பிலேயே ரௌடி என கடுமையாக பேசினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கை அசைத்தால் திமுகவை அழித்துவிடுவோம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.