We are not serious about Kamal speech -
நிலவேம்பு குறித்து கமல் கூறிய கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் கூறி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை குறைக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் காய்ச்சல் குறைந்தபாடில்லை.
நாள்தோறும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகிறது.
சாதாரண காய்ச்சல் வந்தால்கூட டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதோ? என்றுதான் மக்கள் பதறுகின்றனர்.
டெங்கு காய்ச்சலை குணமாக்க நிலவேம்பு குடிநீரைக் குடிக்க சொல்கிறது தமிழக அரசு. அதன்படி அனைத்து மருத்துவமனைகள், அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிலவேம்பு குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லியிலிருந்து டெங்கு நோய் நிலைமையை கண்டறிய ஐந்து மருத்துவ நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அனுப்பினார்.
இந்த நிபுணர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சில மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். ஓரிரு நாளில் மத்திய அரசாங்கத்திடம் அறிக்கை தர இருக்கிறார்கள்.
இந்தக் குழுவின் தலைவரான அஷ்தோஷ் பிஸ்வாஸ், நிலவேம்பு குடிநீரை குடிக்கச்சொல்லி இந்த மருத்துவக்குழு பரிந்துரை செய்யாது. ஏனெனில், இது குணமாகும் என்று அறிவியல் ரீதியாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
இதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், “இந்த நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்பது காலம் காலமாக அனுபவத்தால் அறிந்த ஒன்று. குறிப்பாக நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாமல், மேலும் எட்டு மூலிகைகளைக் கொண்டு, சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். இதனை அங்கீகரிக்கப்படாத மருந்து என்று குறிப்பிடுவது தவறான கருத்து” என்று கூறி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக் கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என கூறி உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக பாரதீய ஜனதா தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், “நிலவேம்பு கசாயம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கமல்ஹாசன் அனைத்தையும் சினிமாவாகவே பார்க்கிறார், எழுதிக் கொடுக்கும் வசனத்தை பேசுவது அரசியல் அல்ல.
கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது என்பதை அவரது கருத்துகள் காண்பிக்கின்றன” என்று கமலை வறுத்தெடுத்தார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன்.
