Asianet News TamilAsianet News Tamil

மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல.. பதிவை நீக்கிய கோழை.. அண்ணாமலை, மனோ தங்கராஜ் மோதல்

பிரதமர் மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை. 

We are not Savarkar family to apologize..Annamalai vs Mano Thangaraj clash tvk
Author
First Published Nov 25, 2023, 12:09 PM IST | Last Updated Nov 25, 2023, 12:22 PM IST

ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வட மாநில நிறுவனத்திடம் பணம் பெற்று பரப்புரை செய்கீறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை, ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது என அமைச்சர் மனோஜ் தங்கராஜ் அண்ணாமலைக்கு பதில் அளித்துள்ளார். 

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் மோதிக் கொண்டுள்ளனர். 

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்;- திரு. மனோ தங்கராஜ் அவர்களே இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.

 

 

 

உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல என அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பாலவளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?  குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

 

 

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை என அமைச்சர் மனோ தங்கராஜிக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்;- கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்  நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். 

ஏற்கனவே பிரதமர் மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை. 

 

 

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios