உ.பி.யில் நடந்த கலவரத்தையும் பிரச்னையின் வேரையும் தெரிந்துகொள்ள நாங்கள் குழுவை அனுப்பினால், பாஜக ஏன் தடுக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் கிராம தலைவரால் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் உ.பி. கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா சோன்பத்ராவுக்கு சென்றார். ஆனால், அவரை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

 
இதனால், அந்த இடத்திலேயே அமர்ந்து இரவு முழுவதும் பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீஸார் அவரை கைது செய்து மிசாபூரில் தடுப்பு காவலில் வைத்தனர். அப்போதும் பிரியங்கா போராட்டத்தைத் தொடர்ந்தார். பிரியங்கா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கருத்து தெரிவித்துள்ளார். “ உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதலே அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் எங்கேயாவது சிறு கலவரம் நடந்தாலும், உண்மை அறியும் குழுவை பாஜக அனுப்புகிறது.  உ.பி.யில் நடந்த கலவரத்தையும் பிரச்னையின் வேரையும் தெரிந்துகொள்ள நாங்கள் குழுவை அனுப்பினால், பாஜக ஏன் தடுக்கிறது?பிரியங்கா தர்ணாவில் ஈடுபட்டத்தில் எந்தத் தவறுமே கிடையாது.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.