“ மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று செல்லூர் ராஜூ பேசினார். 

சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலடித்திருக்கிறார்.

அணில் வராமல் பார்த்துக்குங்க

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா பற்றி மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசினார். செல்லூர் ராஜூ பேசுகையில், “ மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கிண்டலாகப் பேசினார். செல்லூர் ராஜூவின் இந்தப் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை எழுந்தபோது, அணில்களால் மின் தடை ஏற்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். அதை வைத்துதான் செல்லூர் ராஜூ கிண்டலாக இன்று பேசினார்.

தெர்மகோலோடு கிளம்புங்க

 இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தக் கிண்டலுக்கு தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், “தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து ‘ தடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்.” என்று செல்லூர் ராஜூவை கிண்லடித்து செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…