உள்ளூர்த் தமிழர்களுக்கு ஒன்று என்றால்  உதவுவதற்கு ஓடோடி வருவதற்கு வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் என்றுமே தயங்கியதில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் ஏற்கனவே ஏராளமான உதவிகள் செய்துவரும் நிலையில் வாஷிங்டன் மக்கள் கஜா நிவாரண நிதிக்காக மொய்விருந்து நடத்தி நெகிழ வைத்துள்ளனர்.

. வாஷிங்டன் நகரில் இருக்கும் 'ஏம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ’டைன் ஃபார் கஜா’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்து நிதி திரட்ட விரும்புவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாஷிங்டன் டி.ஸியில் இருக்கும் தமிழர்கள் 200க்கும் மேற்பட்டோர் உணவருந்தி  தாராளமாக நன்கொடை வழங்கிச் சென்றனர். இந்த விருந்து ஏற்பாட்டுக்கு  சென்னை எக்ஸ்பிரஸ் உணவகம் இலவசமாக உணவு வழங்கி தன் பங்கை செலுத்தியது.

இதுகுறித்து பேசிய மொய் விருந்து ஏற்பாட்டாளர்கள், “இதுவரை வேதாரண்யம் பகுதியில் இருக்கும் 7 கிராமங்களில் 650 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளோம். மேலும் 8 கிராமங்களுக்கு உதவி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதி முழுமையாக திரட்டப்பட்டவுடன் அந்த எட்டு கிராமங்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்” என்றனர். முன்னதாக, மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் நிதி உதவி திரட்டும் வகையில் பெருநடை நடத்தியது குறிப்பிடத்தக்கது.