ஒன்றிய குழு தலைவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேச வருமாறு அழைப்பு விடுத்தும் பாஜக தரப்பில் இருந்து அதிமுக தலைமையகத்திற்கு வராமல் இழுத்தடித்ததாக புகார் எழுந்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ளன. கணிசமான இடங்களில் அதிமுக கூட்டணி வென்றுள்ளது. தலா 13 மாவட்ட கவுன்சில்களை அதிமுகவும், திமுகவும் சரிசமமாக வென்றுள்ளன. அதன் படி இரண்டு கூட்டணிகளுக்கும் தலா 13 மாவட்ட கவுன்சில் சேர்மன் பதவி கிடைக்கும். இதே போல் மொத்தம் உள்ள 315 ஒன்றிய கவுன்சில் சேர்மன் பதவிகளில் திமுக கூட்டணி 160 இடங்களையும், அதிமுக கூட்டணி 140 இடங்களையும் வென்றுள்ளன. எஞ்சிய இடங்களில் இழுபறி நீடிக்கிறது.

மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் மற்றும் ஒன்றிய குழு சேர்மன் பதவிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் பேச்சுவார்த்தையை அதிமுக நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பாமக மற்றும் பாஜகவிற்கு அதிமுக தலைமையிடம் இருந்து அழைப்பு சென்றுள்ளது. இதனை ஏற்று பாமக தலைவர் ஜி.கே.மணி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இரவு ஒன்பது மணிக்கு தொடங்கிய பேச்சு மறுநாள் காலை 1 மணி வரை நீடித்தது.

சுமார் நான்கு மணி நேரம் பாமக – அதிமுக நிர்வாகிகள் பேசியும் ஒன்றிய கவுன்சில் சேர்மன் பதவிகளில் பாமகவிற்கு எத்தனை இடங்கள் என்பதை இறுதி செய்ய முடியவில்லை. சுமார் 20 இடங்கள் வரை பாமக எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பத்து இடங்களுக்கு மேல் கொடுக்க அதிமுக தயாராக இல்லை என்று சொல்கிறார்கள். பாமகவிற்கு கொடுக்கும் அதே எண்ணிக்கையிலான ஒன்றிய குழுசேர்மன் பதவிகளை தேமுதிகவிற்கும் வழங்க வேண்டும்.

அதே போல் பாஜகவும் கணிசமான எண்ணிக்கையில் பதவிகளை எதிர்பார்க்கும். எனவே பாமக கேட்கும் 20 இடங்களை கொடுக்க அதிமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.இதனால் உடன்பாடு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதனிடையே இந்த பேச்சுவார்த்தைக்கே வராமல் அதிமுகவிற்கு பாஜக போக்கு காட்டி வருவதாக சொல்கிறார்கள்.

பெரும்பாலான இடங்களில் பாஜகவிற்கு ஒன்றிய கவுன்சிலர்களே இல்லை. அப்படி இருக்கையில் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு எதற்காக அதிமுகவிடம் சென்று பேச வேண்டும் என்று பாஜக முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். கன்னியாகுமரியில் கூட சொந்த செல்வாக்கில் ஒன்றிய தலைவர் பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் முடிவில் பாஜக இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக – பாஜக கூட்டணியின் விரிசலை அதிகமாக்கியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.