ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் காங்கிரஸூக்கு எதிராக வாக்களியுங்கள் என தனது கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீசும் அனுப்பினார்.

இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவை சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதை திரும்ப பெற்றுவிட்டார். இதனிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டும் தேதியை அறிவிக்க முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரிடம் 3 முறை கோரிக்கை வைத்தும் அதை அவர் நிராகரித்துவிட்டார். 

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால், ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.