மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்,  இளவரசியின் மகன் விவேக் இன்று இரண்டாவது முறையாக ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி  அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள்  சிகிச்சை பெற்று வந்த அவர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலச மஹாலில் ஆறுமுகசாமி விசாரணையைத் துவங்கி நடத்தி வருகிறார். 

இந்த விசாரணை ஆணையத்தில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என பல்வேறு தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை அளித்து வருகின்றனர்.  அவர்களது வாக்குமூலங்களும், பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.

ஜெயா தொலைக்காட்சியி சிஇஓ, கடந்த மாதம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு விவேக்கிற்கு, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த வகையில் விவேக், இன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.